பயணம்
பயணம் பயணம் வாழ்க்கை பயணம்
பயணம் முடியவே வருமாம் மரணம்
பயண இடையிலும் வரலாம் மரணம் – நீ
வரணும் வரணும் இதை அறிய வரணும் – நீ
வாழ்க்கை வாழவென ஏட்டிலே படித்தாய் – நீ
போகும் வழியிலே றோட்டிலே மறந்தாய் – நீ
சேரும் கூட்டத்தில் உன்னையே கரைத்தாய் நீ
இருக்கும் சுயத்தினை அடியோடு இழந்தாய் – நீ
இழந்து போனதை திருப்பிட மறுத்தாய் – நீ
இழக்கப் போவதை என்றுதான் நினைப்பாயோ – நீ
குழந்தைப் பருவத்தில் செல்லமாய் வளர்ந்தாய் – நீ
நாட்டு நடப்பாலே புலத்தினை பெயர்ந்தாய் – நீ
வந்து சேர்ந்ததும் ஒழுங்காக இருந்தாய் – நீ
காலம் கடந்திட விலகியே போனாய் – நீ
மாளும் கூட்டத்தில் மலிவாக வாழ்ந்தாய் – நீ
சேர்ந்த கூட்டத்தில் உன்பங்கிற் கெடுத்தாய் – நீ
வாழும் வாழ்க்கையை கணக்கிட மறந்தாய் – நீ
வாழ்வின் பெறுமதி தேடிட மறந்தாய் – நீ
வாழ்க்கை பயணம் வா – வாழ்ந்து பார்க்கலாம்
நானும் யாரை இங்கு குறை சொல்ல வரவில்லை
நிறைவை சொல்லிவிட்டு போகவும் நான் போவதில்லை
வாழ்ந்தார் சாவார் என்று இருக்கவும் முடியவில்லை
எவ்வண்ணம் சொல்வதென்று தீர்க்கமாய் தெரியவில்லை
கூடவாய் பேசிவிட்டு அடிவாங்கும் எண்ணமில்லை
அதற்காய் வாய்மூடி இருக்கவும் முடியவில்லை
அண்ணன் தம்பி மார்க்கு அன்புவழி சொல்லாமல்
அடுத்தோர் இடம்போய் சொல்வதற்கு இஷ்டமில்லை
எனக்கு உனக்கென தனித்துவம் வேணுமடா
அவன்தான் மனிதன் ஊர் சொல்லவேணுமடா
பிறந்தார் இறந்தார் சொல்லுவதில் ஆசையில்லை
ஒன்றுமே செய்யாமல் மாளுவதில் லாபம் இல்லை
உனக்குள் தூங்கிடும் சுயத்தினை எழுப்பிடு
உருளும் உலகத்திற் குன் பங்கைக் கொடுத்திடு
எழும்பு எழும்புடா துடித்து நீ கிளம்பு
வளரும் தமிழுக்கு நீயு முதுகெலும்பு


