பொறாமை
உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்
என்னைக் கவிழ்க்க சிலர் உள்ளம் துடிக்கும்
என்னில் குறை காண தினமும் தவிக்கும்
என்னைப் பொய்யனெனச் சொல்லித் தொலைக்கும்
நான் போகும் வழி எல்லாம் குழியைப் பறிக்கும்
என்பெயர் சொல்ல இங்கென் வாழ்க்கை இல்லை
சொல்லித் திரிவதிலும் பயனேதும் இல்லை
வாழ்வில் பட்டதையே நான் சொல்லிப்போவேன் – என்
கையில் சுட்டதையும் நான் சொல்லிப்போவேன்
நீ தந்த வரத்திற்கு இயற்கையே நன்றி
நான் இங்கு வெறும் புழுதி உன் கருணை இன்றி
உனக்காக பணிசெய்வேன் வரையறை இன்றி
தூற்றுவார் தூற்றட்டும் அவர் காட்டுப் பன்றி
உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்
வரி கொண்டு நான் பாய்வேன் நான் வரிப்புலி
தவறேதும் நான் செய்யேன் எனக்கேது கிலி
சமுதாய மேம்பாட்டில் நான் சின்ன உளி
தடுமாறிப்போனாலே அன்றே நான் பலி
ஐயோ எனக்கிங்கே எதிரிகள் வேண்டாம்
கூடித்திரியவும் நண்பர்கள் வேண்டாம்
தன்னந்தனியாயே நான் இங்கு வந்தேன்
இன்னும் சில நாளில் நான் மாண்டு போறேன்
பொங்கும் பொறாமையும் ஒங்கும் எரிச்சலும்
வாழ்வில் வந்துவிட்டால் அமைதி இருக்காது
மங்கும் வாழ்வுதனில் எங்கும் அன்பு கொண்டால்
சொர்க்கம் என்ற ஒன்று வேறெங்கும் இருக்காது


